தமிழ்நாடு செய்திகள்

'கத்திரி வெயில்' இன்றுடன் விடைபெறுகிறது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு

Published On 2025-05-28 08:40 IST   |   Update On 2025-05-28 08:40:00 IST
  • முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.
  • சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை:

தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 4-ந் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. இந்த ஆண்டு வெப்ப அலை தமிழ்நாட்டில் இருக்காது. வெப்பத்தின் தாக்கமும் வழக்கத்தைவிட குறைந்தே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கேற்றாற்போல், முதல் வாரத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்து காணப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது.

இதற்கிடையில் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கியதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழையும் பதிவாகி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வெப்பம் தணிந்தே காணப்படுகிறது.

அதிலும் நேற்றைய வெயில் அளவை பார்க்கையில், தொண்டியில் மட்டும் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. மற்ற இடங்களில் எல்லாம், இயல்பைவிட 1 டிகிரி முதல் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்து இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கக் கூடிய பகுதிகளான வேலூர், திருப்பத்தூரில் நேற்று இயல்பைவிட 6 டிகிரி குறைந்து வெப்பம் பதிவானது. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் சுட்டெரிக்கும் வெப்பம் என எந்த ஆரவாரமும் இல்லாமல் வழக்கம்போல இன்றுடன் விடைபெறுகிறது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர், மதுரை, வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவானது. கடந்த ஆண்டில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானது உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் அளவு குறைந்தே இருக்கிறது. இருந்தாலும் உஷ்ணத்தால் சில நாட்கள் மக்கள் அசவுகரியத்தை சந்தித்தனர்.

Tags:    

Similar News