ஆவின் தீபாவளி ஸ்வீட் 180 டன் தயாரிப்பு: சென்னையில் 35 பார்லர்களில் ஆர்டர் கொடுக்கலாம்
- ஆன்லைன் மற்றும் செல்போன் வழியாக போன் செய்து தேவையான இனிப்புகளை ஆர்டர் செய்யலாம்.
- அரசு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களிடம் இருந்து ஆர்டர் பெறப்படுகிறது.
சென்னை:
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி ஆவின் நிறுவனம் சிறப்பு இனிப்பு வகைகளை தயாரித்து விற்பனை செய்கிறது.
பொதுமக்கள் தொழில் நிறுவனங்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு வசதியாக ஆர்டர்கள் பெறப்படுகிறது.
ஆன்லைன் மற்றும் செல்போன் வழியாக போன் செய்து தேவையான இனிப்புகளை ஆர்டர் செய்யலாம். காஜு கத்திலி, காஜு பிஸ்தா, நட்ஸ் அல்வா, நட்ஸ் பாதுஷா ஆகிய சிறப்பு சுவீட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் விலை கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கோவா சுவீட், மைசூர்பாகு, மில்க் கேக், மில்க் பேடா, ரசகுல்லா, குலோப்ஜாமூன், பேரீச்சம் கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் கிலோ ரூ.450 மற்றும் ரூ.500-க்கு விற்கப்படுகிறது.
மேலும் மிக்சர், முறுக்கு, கார வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் ஆவின் சுவீட் வகைகளை குறைந்த விலையில் வாங்குவதற்கு வசதியாக 30 லட்சம் பால் பாக்கெட்டுகளிலும் ஆர்டர் கொடுக்கக்கூடிய தொடர்பு எண்.7358018395 அச்சிடப்பட்டுள்ளது. அதில் தொடர்பு கொண்டு ஆவின் சுவீட் வகைகளை முன்பதிவு செய்து பெறலாம்.
இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆயுத பூஜைக்கு தேவையான சுவீட் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களிடம் இருந்து ஆர்டர் பெறப்படுகிறது. பொதுமக்கள் நந்தனம் ஆவின் பார்லர் மற்றும் சென்னையில் உள்ள 35 பார்லர்களிலும் ஆவின் சுவீட்டுக்கு முன்பதிவு செய்யலாம். நேரில் சென்றும் தேவையான அளவு வாங்கலாம்.
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் கூடுதலாக சுமார் 180 டன் சுவீட் தயாரிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.