17 வயது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது- 60 வயது தொழிலாளி கைது
- குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
- பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இம்மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 60 வயதான கூலித் தொழிலாளி பழனிசாமி என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதில் கர்ப்பமான மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சேலம் மாவட்ட போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பூரணம் தலைமையிலான போலீசார், மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை பெற காரணமான கூலி தொழிலாளி பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
மும்பை, சென்னை உட்பட பல இடங்களில் தேடிய போலீசார் ஒரு வழியாக முதியவர் பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.