Recap 2024
null

2024 ரீவைண்ட்: கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம்... உயிர்பலி

Published On 2024-12-25 09:35 IST   |   Update On 2024-12-31 08:35:00 IST
  • கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.
  • தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர பல காரணங்கள் உள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதியன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அதை பலரும் குடித்தனர். கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரத்திலேயே அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், மயக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்த மக்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

 

சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருப்பது மருத்துவர்கள் மேற்கொண்ட சோதனையின் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து உயிர்பலி தொடர்ந்தது.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் இறுதி சடங்குக்கு சென்ற இடத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அதையும் சிலர் வாங்கி குடித்தனர். உடனே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இவ்வாறாக கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 67 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

இதைத்தொடர்ந்து கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (50) என்பவர் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 68 பேரின் உயிர்களை பலி வாங்கியது இந்த கள்ளக்குறிச்சி உயிரிழப்பாகும்.

கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தொடக்கத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறினார். அதுவே உயிரிழப்பு அதிகமானதற்கு காரணமாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தபோதிலும், கள்ளச்சாராய விற்பனை இன்னும் தொடர பல காரணங்கள் உள்ளன.

 

ஒரு பாக்கெட் சாராயத்தின் விலை 50 ரூபாய் மட்டுமே என்பதால், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களின் விருப்பமாக கள்ளச்சாராயம் உள்ளது. கள்ளச்சாராயம் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதுமே கிடைக்கும் என்பதால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக அப்பகுதியினர் கூறினர்.

கள்ளக்குறிச்சியில் 24 மணிநேரமும் கள்ளச்சாராயம் கிடைப்பதாகவும், அதுவும் ஆட்டோ, இருசக்கர வாகனம் என பலவற்றிலும் வந்து வீட்டிலேயே கொடுத்துவிட்டு போகும் வழக்கம் உள்ளதாகவும் அப்பகுதி பெண்கள் கூறினர்.

கள்ளக்குறிச்சியில் மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியவுடன், அம்மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நியமிக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு போலீசார் உள்பட 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் உயிரிழந்தது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News