தமிழ்நாடு

கோத்தகிரியில் இன்று காலை சிறுத்தை தாக்கி கூலித்தொழிலாளி படுகாயம்

Published On 2023-01-25 06:05 GMT   |   Update On 2023-01-25 06:05 GMT
  • தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது
  • சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.

கோத்தகிரி:

கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் பெருமளவில் காணப்படுகின்றன.

இந்த வனப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. வன விலங்குகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வாடிக்கையாகி விட்டது.

சோலூர்மட்டம் பகுதிக்கு உட்பட்ட பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கூலித்தொழிலாளி.

இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்து, பணிக்கு செல்வதற்காக பரவக்காடு பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் வழியாக நடந்து வந்தார்.

அப்போது அங்கு தேயிலை தோட்ட மறைவில் இருந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வம் மீது பாய்ந்து அவரை தாக்கியது.

இதில் பயத்தில் பன்னீர்செல்வம் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடி அருகே இருந்த புதருக்குள் மறைந்து விட்டது.

இதில் அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடியிருப்பு பகுதியில் உலாவரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News