தமிழ்நாடு செய்திகள்

கடையத்தில் காட்டுப்பன்றி தாக்கி பள்ளி மாணவன்-மாணவி காயம்

Published On 2022-12-22 12:51 IST   |   Update On 2022-12-22 12:51:00 IST
  • கீழக்கடையம் பகுதியில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி ஒன்று சுற்றி திரிந்துள்ளது.
  • வீடுகள், தோட்டங்கள் மற்றும் வயல்களில் சுற்றி அலைந்த காட்டுப்பன்றி, 2 பேரை தாக்கி உள்ளது.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகளான கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்டவை புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் அவை கடித்து குதறிவிடும் சம்பவமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்நிலையில் கீழக்கடையம் பகுதியில் இன்று அதிகாலை காட்டுப்பன்றி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வீடுகள், தோட்டங்கள் மற்றும் வயல்களில் சுற்றி அலைந்த அந்த காட்டுப்பன்றி, கீழக்கடையத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராஜ்குட்டி என்பவருடைய மகன் பரசுராம்(வயது 15) மற்றும் ராமர் மகள் வைஷ்ணவி ஆகியோரை தாக்கி உள்ளது.

காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும், அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கடையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் 2 பேரும் வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனத்துறையினர் காட்டுப்பன்றியை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News