தமிழ்நாடு

கொழுப்பு அடர்த்தி குறைக்கப்படுவதால் ஆவின் பச்சை பாக்கெட் பால் விலை உயர்கிறது?

Update: 2023-02-03 07:49 GMT
  • சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.
  • கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது.

சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

சென்னையில் பச்சைநிற பால் பாக்கெட் (4½ சதவீத கொழுப்பு சத்து), அரை லிட்டர் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் கோவை மாவட்ட ஆவின் நிர்வாகம் இப்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்ற பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-

கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் தற்போது கொழுப்பு சத்து குறைத்து பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என கொண்டு வந்துள்ளதை நிறுத்தி பழைய நடைமுறையில் அதாவது நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் அல்லது புதிய வகை பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News