தமிழ்நாடு

போதைப்பொருளை கடத்தி கைதான 2 பேர்.

சென்னையில் இருந்து ரூ.160 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அனுப்பியது யார்?- தீவிர விசாரணை

Published On 2022-12-13 05:28 GMT   |   Update On 2022-12-13 05:28 GMT
  • மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
  • சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சம்பவத்தன்று இரவு சத்திரக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது காரில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களான கஞ்சா ஆயில் 50 கிலோ மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் 38 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.160 கோடி ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (வயது39), தனசேகரன் (32) என தெரியவந்தது. இவர்கள் ராமநாதபுரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News