தமிழ்நாடு

வாயலூர் பாலாற்று தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

Published On 2023-11-23 04:04 GMT   |   Update On 2023-11-23 04:04 GMT
  • வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது.
  • வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது.

கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து கல்பாக்கம் அடுத்த வல்லிபுரம் மற்றும் வாயலூர் தடுப்பணையில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் கல்பாக்கம், உய்யாலிகுப்பம் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகிறது. வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து உபரிநீர் வெளியேறினால், தடுப்பணைக்கு கீழே உள்ள கிராமங்களின் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். பாலாற்று நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வாயலூர், வல்லிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான இரும்புலிசேரி, நல்லாத்தூர், ஆயப்பாக்கம், கல்பாக்கம் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அந்த பகுதி குடியிருப்புவாசிகளும் குடிநீர் தேவைக்கு பஞ்சம் ஏற்படாது என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வாயலூர், வல்லிபுரம் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலந்து வருவதால் கூடுதலாக வாயலூர் கடற்கரை அருகில் இரண்டு, மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி உபரி நீரை சேமிக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது வாயலூர் பாலாற்றில் இருகரைகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால் தண்ணீர் நிரம்பியுள்ளதால் பாலாறு கடல் போல் காட்சியளிக்கிறது. ஒருபுறம் தடுப்பனைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் பகுதியில் பொதுமக்களும், இளைஞர்களும் அருவிகளில் குளிப்பது போன்று குளித்து மகிழ்ச்சியடைகின்றனர். நீச்சல் தெரியாத சிறுவர்கள் பலர் ஆபத்தை உணராமல் இங்கு குளித்து வருவதையும் காண முடிகிறது.

Tags:    

Similar News