புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாயனார் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம்: சென்னை, வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
- ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
- ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) மாலை 6.46 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் சென்னை, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பவுர்ணமியொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் கோட்டத்தில் 130 பஸ்கள் இயக்கப்பட்டது.
திருப்பத்தூரில் 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் திருப்பதி, சித்தூரில் இருந்து 140 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல பவுர்ணமியொட்டி கலசப்பாக்கம் அடுத்துள்ள பருவதமலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏரி தரிசனம் செய்தனர். குடும்பத்துடன் கிரிவலம் சென்றனர்.