தமிழ்நாடு செய்திகள்

கருமுட்டை விவகாரம்: ஓசூர்-ஆந்திரா தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் 4 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை

Published On 2022-06-12 10:32 IST   |   Update On 2022-06-12 10:32:00 IST
  • கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை.
  • சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.

ஈரோடு:

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை போலி ஆதார் கார்டு மூலம் பெற்றோரே, பெண் புரோக்கர் மூலம் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை வளர்ப்பு தந்தையே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் இதற்கு உடந்தையாக அவரது தாய் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், சிறுமியின் கருமுட்டையை ஈரோடு, பெருந்துறை மட்டும் அல்லாது சேலம், ஓசூர், ஆந்திரா மாநிலம் திருப்பதி, கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரிகளில் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சிறுமியின் தாய், வளா்ப்பு தந்தை, புரோக்கராக செயல்பட்ட மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த டிரைவர் ஜான் உட்பட 4 பேர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரகத்தை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் ஈரோடு வந்து, பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடமும் நேரடி விசாரணையாக நடத்தினர்.

இதற்கிடையில் மாவட்ட காவல் துறை சார்பில், ஈரோடு ஏ.டி.எஸ்பி. கனகேஸ்வரி தலைமையில் தனி விசாரணை நடந்து வருகிறது. ஈரோடு, பெருந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதில் பாதிக்கப்பட்ட சிறுமியை தவிர, போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா? என தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை பெற்றவர்கள் பட்டியல், அவர்களது ஆதார் எண், முகவரி, அம்முட்டையால் கருவுற்றோர் விபரம், அவர்களது முகவரி போன்றவற்றை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சிறுமியிடம் கருமுட்டை எடுத்தது தொடர்பாக சேலம், ஓசூர், கேரளா மாநிலம் திருவனந்தபுரம், ஆந்திரா மாநிலம் திருப்பதி ஆகிய இடங்களில் இயங்கும் தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில், ஓசூர், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், ஊழியர்கள் என 6 பேர் நேற்று சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களை, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினார்.

சிறுமியிடம் கருமுட்டை எடுத்தபோது, சிறுமி தரப்பில் கொடுத்த போலி ஆதார் அட்டை நகலினை ஆய்வு செய்தனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் இதுவரை எத்தனை முறை கருமுட்டை தானம் செய்யப்பட்டது.

எந்தெந்த நாட்களில் செய்யப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தினர். கருமுட்டை தானம் செய்யப்பட்டபோது அரசு அறிவித்துள்ள நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா?. என்பது குறித்து டாக்டர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

எந்த ஆவணங்கள் அடிப்படையில் சிறுமிக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது என்றும் டாக்டர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு தகவல் கிடைத்துள்ளன. பின்னர் விசாரணையை முடித்துக்கொண்டு மாலை மருத்துவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

இதுகுறித்து ஈரோட்டில் டி.ஐ.ஜி. முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து தாய், வளர்ப்பு தந்தை, பெண் புராக்கர் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருச்சியில் உள்ள 5 தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளோம். ஈரோடு, பெருந்துறை தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது. மருத்துவ பணிகள் இயக்குனரக டாக்டர் வல்லுனர் குழுவினர் இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவ ரீதியாக விசாரிக்கின்றனர்.

தமிழக அரசு ஒரு மருத்துவ குழுவை அமைத்துள்ளது. முறைகேடு நடந்ததாக மருத்துவ குழுக்கள் அறிக்கை சமர்பிக்கும் பட்சத்தில் அதனடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய முடியும். தவறு நடந்திருந்தால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விவகாரத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சட்டவிரோத கருமுட்டை விற்பனை குறித்து தெரிய வந்தால் பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மாலை அல்லது நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள், நிர்வாக இயக்குனர்கள் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து சிறுமிக்கு கருமுட்டை எடுத்தது தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதனால் இந்த வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News