தமிழ்நாடு

ஆவடி பகுதியில் பஸ் போக்குவரத்து குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

Published On 2023-09-02 08:29 GMT   |   Update On 2023-09-02 08:29 GMT
  • வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
  • பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

ஆவடி பகுதியில் மாநகர பேருந்து சேவை பாதியாக குறைக்கப்பட்டிருப்பதால் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த பஸ் போக்குவரத்து பாதியாக குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.

பயணிகள் இதனால் பஸ்சை பிடித்து வீட்டுக்கு போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது என்றும் புகார் தெரிவித்துள்னர். பட்டாபிராமில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்படும் 54 சி பேருந்தை அப்பகுதி மக்கள் பலர் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த பேருந்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தி வந்த போதிலும் இதன் சேவை குறைக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும் பயணிகள் இதுபோன்று மேலும் பல பஸ்களையும் பட்டியலிடுகிறார்கள்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பந்தூர் செல்லும் '153 பி' பஸ்கள் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளதால் இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பொது மக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

121 இ எண் கொண்ட பஸ் எம்.கே.பி. நகரில் இருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதன் சேவையும் குறைக்கப்பட்டுள்ளதால் வட சென்னை பகுதியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு செல்லும் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இதே போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இருந்து 536 எண் கொண்ட பேருந்து பட்டாபிராமுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போன்று 65 பி எண் பேருந்து அம்பத்தூரில் இருந்து ஆவடிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டு பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இப்படி வழித் தடங்களில் பஸ்கள் குறைக்கப்பட்டதால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஷேர் ஆட்டோ டிரைவர்கள் இந்த வழித் தடங்களில் கூடுதல் கட்டணங்களுடன் அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

எனவே மேற்கண்ட வழித்தடங்களில் தேவையான அளவு பஸ்களை சீரான இடைவெளியில் இயக்க வேண்டும் என்று ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News