தமிழ்நாடு
தேங்காய் நார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

கொடுமுடி அருகே தேங்காய் நார் தொழிற்சாலையை முற்றுகையிட்ட கிராம மக்கள்- தடையை மீறி மின்கம்பம் அமைத்ததற்கு எதிர்ப்பு

Published On 2022-06-25 05:19 GMT   |   Update On 2022-06-25 05:19 GMT
  • மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர்.
  • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கொடுமுடி:

கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் தனியார் தேங்காய் நார்மில் தொழிற்சாலை சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி ஆகும்.

இந்த தொழிற்சாலை செயல்பட்டு இதில் இருந்து வரும் கழிவுநீரால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து இந்த பகுதியை சேர்ந்த கிராமமக்கள் பல கட்டமாக போராட்டம் நடத்தினர்.

அதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கிராமசபை கூட்டம் கூட்டி இந்த நார்மில் தொழிற்சாலைக்கு அனுமதி தரக்கூடாது என தீர்மானம் போட்டு கம்பெனி செயல்படுவதை தடுத்து நிறுத்தி வைத்து இருந்தனர்.

இதற்கு இடையே நார்மில் தொழிற்சாலையில் புதிய மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் நட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இச்சிப்பாளையம் கிராம மக்கள் தேங்காய் நார்மில் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மின் கம்பம் நட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் தரப்பில் புதியதாக நடப்பட்ட மின் கம்பத்தை அகற்ற வேண்டும். இல்லையேல் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைக்குரிய இடத்தில் மின் கம்பம் நட்டது தவறு. உடனடியாக அகற்றிட வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து மின்வாரிய ஊழியர்களும் வந்து மின் கம்பத்தை பிடுங்கி எடுத்து சென்றனர். நார்மில் முன்பு கூடியிருந்த கிராமமக்களிடம் போலீசார் பேசி அனைவரையும் கலைந்து போக செய்தார்கள். மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பத்தை பிடுங்கியவுடன் கிராமமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் சிறிது நேரம் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News