தமிழ்நாடு செய்திகள்

வேலூரில் சுவீட் கடையில் 14 மூட்டை சில்லரை காசுகளை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

Published On 2022-07-08 12:21 IST   |   Update On 2022-07-08 12:21:00 IST
  • வேலூர் வேலப்பாடி ஆரணி சாலையில் பிரபலமான சுவீட் கடை ஒன்று உள்ளது.
  • கடையில் இருந்த சில்லரைக் காசுகளை துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்:

திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் தினந்தோறும் தினுசு தினுசாக திட்டமிட்டு பல்வேறு விதங்களில் கொள்ளையை அரங்கேற்றி வருகின்றனர்.

வீடு மற்றும் கடைகளில் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பல் அங்குள்ள விலை உயர்ந்த நகை மற்றும் கட்டு கட்டாக பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இதுவரை நடந்துள்ளன.

ஆனால் வேலூரில் ஒரு கடையில் இருந்த சில்லறை காசு மூட்டைகளை கும்பல் தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் வேலப்பாடி ஆரணி சாலையில் பிரபலமான சுவீட் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் ஷட்டர் கதவை உடைத்து கொள்ளை கும்பல் உள்ளே புகுந்தனர். கடையில் கட்டு கட்டாக பணம் மற்றும் விலைவு உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை.

ஆனால் வாடிக்கையாளர்க ளிடமிருந்து வசூலான 1,2,5 ரூபாய் நாணயங்கள் என சில்லரை காசுகளை மூட்டைகளில் கட்டி வைத்திருந்தனர். மொத்தம் 14 மூட்டைகளில் ரூ.1.25 லட்சம் சில்லரை காசுகளை கட்டி வைத்திருந்தனர்.

கடைக்குள் புகுந்த கும்பல் எதுவும் கிடைக்காததால் சில்லறை காசு மூட்டைகளை தூக்கிச் செல்ல முடிவு செய்துள்ளனர்.

அதன்படி 14 மூட்டைகளையும் கடைக்கு வெளியே கொண்டு வந்து வாகனம் மூலம் எடுத்துச் சென்று விட்டனர்.

காலையில் கடைக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆரணி ரோடு மற்றும் சுவீட் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் கும்பல் சில்லறை காசு மூட்டைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதன் மூலம் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

14 மூட்டை சில்லரை காசுகளை எங்கே சென்று மாற்ற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடையில் இருந்த சில்லரைக் காசுகளை துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News