வடநெம்மேலி பண்ணையில் இரவில் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்வையாளர்கள் ரசிக்கலாம்
- மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலை பண்ணை உள்ளது.
- வடநெம்மேலி பண்ணையில் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலை பண்ணை உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் தேர்வில் சிறந்த இடமாக இந்த முதலை பண்ணை உள்ளது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் இங்குள்ள முதலைகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் வடநெம்மேலி பண்ணையில் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
குறைந்தது 10 நபர்கள் குழுவாக ஆன்லைன் மூலம் தலா ரூ.900 கட்டணம் செலுத்தினால் இரவில் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்கும் இரவு உலா வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பகலிலும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் முதலைகளை காணலாம் என்று முதலை பண்ணை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, வடநெம்மேலி பண்ணையில் பார்வையாளர்கள் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை ரசிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளை பெரிதும் கவர்ந்த சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட "ஆலி" என்ற முதலை இறந்தது.இது பராமரிப்பாளர்களின் கட்டளையை ஏற்று செயல்படும்.
கடந்த ஆண்டும் இதே போன்று 'ஜாஸ்' என்ற முதலை இறந்தது. அரசிடம் உரிய அனுமதி பெற்று முதலையின் எலும்பு கூடு பதப்படுத்தப்பட்டு பண்ணையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.