தமிழ்நாடு (Tamil Nadu)

மேட்டூர் காவிரி ஆற்றில், ஆபத்தை உணராமல் ஆழமான பகுதியில் குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

Published On 2023-04-24 05:04 GMT   |   Update On 2023-04-24 05:04 GMT
  • மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் மறு கரை ஓரத்தில் ஆழமான பகுதி உள்ளது.
  • கோடை வெப்பத்தை தணிக்க மறுகரை பக்கத்தில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.

மேட்டூர்:

மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் மறு கரை ஓரத்தில் ஆழமான பகுதி உள்ளது. இதை அறியாமல் வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்கும் பொழுது அந்த பகுதிக்கு செல்கின்றனர். இதில் சிலர் அந்த பகுதியில் மூழ்கி இறந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் யாரும் குளிக்க கூடாது என்பதை குறிக்கும் வகையில் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை மற்றும் அணையையொட்டியுள்ள பூங்கா உள்ளிட்ட இடங்களில் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் பலர் அங்குள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கின்றனர். சிலர் எச்சரிக்கை பலகையில் உள்ள அறிவிப்பை கண்டு கொள்ளாமல் கோடை வெப்பத்தை தணிக்க மறுகரை பக்கத்தில் உள்ள ஆழமான பகுதிக்கு சென்று ஆனந்த குளியல் போடுகின்றனர்.

மேலும், வாலிபர்கள் தண்ணீர் வழிந்தோடும் திண்டு மீது உட்கார்ந்து இருந்து சீறி பாயும் தண்ணீரில் குதித்து விளையாடுகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்காக ஆற்றின் கரையில் 2 எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்ததில் ஒரு எச்சரிக்கை பல கையை சேதப்படுத்தி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்த அறிவிப்பினை தெரியாத வண்ணம் செய்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆழமான பகுதியில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுப்பணித்துறை சார்பிலும், காவல் துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News