தமிழ்நாடு

தமிழக மின்வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என ஆலோசனை

Published On 2022-07-13 06:44 GMT   |   Update On 2022-07-13 06:44 GMT
  • தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது.
  • இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது.

சென்னை:

தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மின் கட்டணத்தை உயர்த்தினால் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் கட்டண உயர்வை எப்போது நடைமுறைப்படுத்து என ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

இந்தியாவிலேயே, நகர மயமாக்கல் மிக அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாகவும் இருப்பதால் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, தமிழக அரசு தற்போது பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனாலும் இப்போதுள்ள கடன் சுமை காரணமாக நிதி நெருக்கடி மேலும், மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது.

இதனால் இந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 213 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மின் வாரியம், 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.

அதே நேரத்தில் கடந்த 8 வருடங்களாக செலவினங்களை ஈடுகட்டுவதற்கு மின் கட்டணம் மூலம் சமாளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனாலும் புதிய மின் திட்டங்கள் நடைமுறை மூலதனம் போன்ற செலவுகளை சமாளிக்க தேசிய மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குகிறது.

மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருந்தாலும் இதுவரை மின் கட்டணத்தை உயர்த்த கோரும் மனுவை ஆணையத்தில் சமர்ப்பிக்காமல் உள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளன.

மின் வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதை தவிர்க்கவும் கடனில் இருந்து மீண்டு வருவதற்கும் கட்டணத்தை மாற்றியமைக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

இதன்படி 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான முன்மொழிவு எதுவும் தமிழ்நாடு ஒழுங்கு முறை ஆணையத்தில் சமர்ப்பித்ததாக தெரியவில்லை. கட்டணத்தை உயர்த்தும் பட்டியலை மட்டும் அதிகாரிகள் கைவசம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தான் தேசிய வங்கிகளிடம் மின் வாரியம் மீண்டும் கடன் கேட்டு வருகிறது. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடன் வழங்க இயலாது என்று வங்கிகள் கூறி வருகிறது. இதனால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழலுக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இப்போது உள்ள நடைமுறையை மாற்றி மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்த அறிவிப்பை இன்னும் நடைமுறைப்படுத்தாத சூழலில் மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மின் கட்டணம் உயர்த்துவதை அரசு தள்ளி வைத்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News