தமிழ்நாடு

நச்சுவாயுவை வெளியேற்றிய திருப்பூர் தனியார் சலவை ஆலை மூடல்- மூச்சுத்திணறலால் பாதித்த 20 பேருக்கு தீவிர சிகிச்சை

Update: 2023-06-08 09:06 GMT
  • வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது.
  • சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூரை அடுத்த வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து நச்சுவாயு வெளியேறியது. இதை சுவாசித்த அப்பகுதியை சோ்ந்த 15 சிறுவா்கள் உள்பட 20 பேருக்கு தலைவலி, வாந்தி, கண் எரிச்சல் மற்றும் மூச்சு த்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை மீட்டு குமாா் நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவா்கள் அறிவுறுத்தலின் பேரில் 8 போ் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் கிரியப்பனவா், மாநகர நகா்நல அலுவலா் கவுரி சரவணன், திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினா் செல்வராஜ், திருப்பூா் வடக்கு சட்டமன்ற உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தனா்.

இதையடுத்து வெங்கமேடு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 50க்கும் மேற்பட்டவா்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- வெங்கமேடு பகுதியில் ஏராளமான சலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. துணிகளை காம்பேக்டிங் செய்யும்போது ஒருவிதமான ரசாயனம் சோ்க்கப்படுவதால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சலவை ஆலைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆலையில் திருப்பூா் வடக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளா் சரவணகுமாா் தலைமையிலான குழுவினா் ஆய்வு நடத்தி, பகுப்பாய்வுக்காக மாதிரிகள் எடுத்துச் சென்றனா். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை ஆலையை இயக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நச்சுத்தன்மை வாயு வெளியான சலவைப்பட்டறையின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து ஆலையை மூட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News