தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர் முட்டிபோட்டு நூதன போராட்டம்

Published On 2023-03-17 06:59 GMT   |   Update On 2023-03-17 09:40 GMT
  • மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.
  • கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார்.

திருவள்ளூர்:

பெரியபாளையம் அடுத்த தண்டலம் ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவர் அம்பத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டீசல் மெக்கானிக் படித்து வருகிறார்.

இன்று காலை 8.30 மணி அளவில் அந்த மாணவர் சீருடை மற்றும் கல்லூரியின் அடையாள அட்டை அணிந்த படி திருவள்ளூருக்கு வந்தார். திடீரென அவர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முட்டி போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் விசாரித்த போது அந்த மாணவர் தனது கோரிக்கை குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை. மேலும் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து விசாரித்தால் மட்டுமே தனது கோரிக்கை குறித்து தெரிவிப்பேன் என்று கூறி தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு முட்டிபோட்டபடி நின்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும், திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதும் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கலெக்டர் வர வேண்டும் என்று கூறி பிடிவாதம் பிடித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மாணவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி போலீஸ் காரில் ஏற்றி திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவரிடம் போராட்டத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மாணவரின் இந்த திடீர் நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News