தமிழ்நாடு

வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கருத்து தெரிவிக்காதது ஏன்?- திருமாவளவன் கேள்வி

Published On 2023-02-05 06:51 GMT   |   Update On 2023-02-05 06:51 GMT
  • வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது.
  • யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது:-

வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி,மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே வேங்கை வயல் சம்பவத்தினை இந்த கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவர் அவர் கூறினார்.

மேலும் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என சீமான் கூறியுள்ளது தொடர்பாக கேட்டபோது, சமூகப் பிரச்சனைகளுடன் அரசியலை முடிச்சு போட தேவையில்லை என பதில் அளித்தார்.

Tags:    

Similar News