திருமழிசை புதிய பஸ் நிலையம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்- அமைச்சர் தகவல்
- கோயம்பேட்டில் இருந்து சென்னை நகர் மற்றும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- திருமழிசை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர்:
கோயம்பேட்டில் இருந்து சென்னை நகர் மற்றும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து பஸ்களும் நகருக்குள் வருவதால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கபட இருக்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் பூந்தமல்லி அடுத்த திருமழிசை துணைக் கோள் நகரம் அருகேயும் புதிய பஸ்நிலையம் 25 ஏக்கரில் ரூ. 336 கோடி மதிப்பில் கடந்த 2021-ம் ஆண்டுமுதல் கட்டப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து 4-வது புதிய பஸ்நிலையமாக திருமழிசை பஸ்நிலையம் அமைய உள்ளது. பஸ்நிலைய கட்டுமானபணி 80 சதவீதம் முடிந்து உள்ளது.
இந்த புதிய பஸ் நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருமழிசை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். அவர்கள் பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமழிசை பஸ் நிலையத்தில் 70 அரசு பஸ்கள் மற்றும் 30 தனியார் பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 பஸ்களின் நடைமேடைகளும் சுவர் மூலமாக பிரிக்கப்படும்.
37 புறநகர் பஸ்கள் மற்றும் 27 ஆம்னி பஸ்கள் நிறுத்த பார்க்கிங் வசதி மற்றும் பராமரிக்க பணிமனை வசதி அமைக்கப்படுகிறது. மாநகர பஸ்களை இயக்க தனியாக 36 பஸ் நிறுத்தும் இடம் அமைக்கப்படுகிறது. 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேமிப்பு தொட்டி, மழைநீர் வடிகால்வாய், உயர் அழுத்த மின்சார வசதி, மின்தடையின்போது ஜெனரேட்டர் வசதி செய்யப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் இடம், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழித்தடம், மூன்றாம்பாலினத்தவருக்கு தனி கழிப்பறைகள், பாலூட்டும் அறைகள், பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பஸ்நிலையத்தின் உட்புறத்தில் 3.75 ஏக்கரிலும், அருகில் உள்ள திறந்த வெளி பகுதியில் 2.5 ஏக்கரில் பசுமை பகுதி அமைய உள்ளது.
பயணிகள் பயன்படுத்தும் வகையில், நான்கு 'லிப்ட்'டுகள், பணிகள் மேற்கொள்ள இரண்டு 'லிப்ட்'டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு கன்ட்ரோல் ரூம் அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளரச்சித்துறை முதன்மை செயலர்அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா, பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் இருந்தனர்.