தலமலை வனப்பகுதி ரோட்டில் கூட்டமாக வந்த யானைகள்
- சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.
- யானைகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கடா மான், காட்டெருமை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
மைசூர் தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளிேயறி வருகிறது. தொடர்ந்து யானைகள் ரோட்டில் உலாவி வருகிறது.
அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை யானைகள் துரத்துவது, வழி மறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் அந்த வழியாக கரும்புகள் ஏற்றி வரும் லாரிகளையும் வழி மறித்து அதில் இருந்து கரும்புகளை ருசித்து வருவது அடிக்கடி நடக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் வனப்பகுதி தலமலை வனப்பகுதியில் இருந்து சுமார் 5-க்கும் மேற்பட்ட யானைகள் உணவு தேடி வெளியறியது. தொடர்ந்து அந்த யானைகள் மைசூர் மெயின் ரோடு சிக்கள்ளி என்ற பகுதியில் உலாவி கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் சிறிது தூரத்துக்கு முன்பு ரோட்டோரங்களில் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரம் அங்கேயே உலாவிய யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் மீண்டும் புறப்பட்டு சென்றன.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, ஆசனூர், தலமலை வனப் பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி வருகிறது. எனவே வனப் பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்க கூடாது. யானைகளுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. மேலும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்றனர்.