தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- விளையாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது

Published On 2023-04-12 08:46 GMT   |   Update On 2023-04-12 08:46 GMT
  • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
  • சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்ப தலைவிகள், மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்து மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்பினார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக கவர்னர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த முறை கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டம் குறித்த விரிவான தகவல்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பான விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அடுத்த கட்டமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், அதனை விளம்பரப்படுத்துபவர்கள் உள்ளிட்டோரின் மீது உரிய சட்ட நடவடிக்கை பாய உள்ளது. ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தின் படி இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டை யாராவது விளையாடினால் அது சட்ட விரோதமாக கருதப்படும். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடும் நபர் குற்றவாளியாக கருதப்படுவார். அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்டு உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக தனிப்பட்ட நபர்களோ அல்லது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோன்ற விளம்பரங்களை செய்பவர்களும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் 2 தண்டனையையும் சேர்த்து வழங்குவதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி அதனை இணையதளங்களில் வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். ஆன்லைன் தடை சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த 2 தண்டனையையும் சேர்த்து வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. விளம்பரம் செய்யும் நபர்கள் ஒருமுறை பிடிபட்டு மீண்டும் சிக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

ஆன்லைன் தடை சட்டத்தின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். அவர்களே கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

இந்த சைபர்கிரைம் போலீஸ் பிரிவு அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களிலும் தனிப்பிரிவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இனி அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களும் தங்களது சேமிப்பு பணத்தை தேவையில்லாமல் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக இழந்து தவிப்பதும் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News