குளச்சலில் 40 அடி கிணற்றில் 5 நாளாக உயிருக்கு போராடிய நாய்க்குட்டி மீட்பு
- குளச்சல் பர்னட்டி விளையை சேர்ந்தவர் தேவராஜ் (50) இவர் வி.கே.பி.பள்ளி அருகில் அரவை மில் நடத்தி வருகிறார்.
- கடந்த 5 நாட்களாக உணவின்றி குரைத்த படியே சோர்வாக கிடந்தது.
குளச்சல்:
குளச்சல் பர்னட்டி விளையை சேர்ந்தவர் தேவராஜ் (50) இவர் வி.கே.பி.பள்ளி அருகில் அரவை மில் நடத்தி வருகிறார்.
இந்த அரவை மில் முன்பு ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் சுற்று சுவர் இல்லாமல் சுமார் 40 அடி ஆழ பாழும் கிணறு ஒன்று உள்ளது.
இந்த கிணற்றில் கடந்த 5 நாட்களுக்கு முன் நாய் குட்டி ஒன்று தவறி விழுந்து உள்ளது.இதை யாரும் கவனிக்காததால் மீட்கப்படாமல் இருந்தது.கடந்த 5 நாட்களாக உணவின்றி குரைத்த படியே சோர்வாக கிடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை அந்த அரவை மில்லுக்கு சென்ற நபர் ஒருவர் நாய்குட்டியின் பரிதாப நிலையை பார்த்து குளச்சல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து நாயை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மாலை நேரம் போதிய வெளிச்சம் இல்லாததாலும் கிணற்றின் உள்ளே மண்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தால் மீட்கும் முயற்சியை கைவிட்டு கிணற்றுக்குள் நாய்குட்டிக்கு உணவு மட்டும் போட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அந்த நாய்குட்டியை பத்திரமாக மீட்டனர்.
நாய்குட்டியின் உரிமையாளர் யார்?என்று தெரியாத நிலையில் தீயணைப்பு துறையினர் நாய்குட்டியை அந்த பகுதியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஒருவரிடம் ஒப்படைத்தனர்.