தமிழ்நாடு செய்திகள்

தார்ச்சாலை அமைக்க கோரி பொதுமக்கள்-மாணவர்கள் திடீர் சாலை மறியல்

Published On 2023-01-06 11:11 IST   |   Update On 2023-01-06 11:11:00 IST
  • சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
  • பலமுறை கோரிக்கை விடுத்தும் தார் சாலை போடவில்லை, இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட உதயமாம்பட்டு கிராமத்தில் சுமார் 700 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தியாகதுருகத்திலிருந்து உதயமாம்பட்டு வரை செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தார்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த சாலையின் வழியாக அந்தியூர், சிக்காடு, சீதேவி, கல்சிறுநாகலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.

இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற உதயமாக்கப்பட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உதயமாம்பட்டு பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது பலமுறை கோரிக்கை விடுத்தும் தார் சாலை போடவில்லை, இதனால் அவ்வப்போது விபத்து ஏற்படுவதாகவும் கூறி பொதுமக்கள் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கூறி விரைந்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News