தமிழ்நாடு

தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து மறியல் செய்ய முயன்ற காட்சி


ஓமலூர் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2022-08-07 07:08 GMT   |   Update On 2022-08-07 07:08 GMT
  • பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

காடையாம்பட்டி:

தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பூசாரிபட்டியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏறினார். அவருக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பஸ் பூசாரிப்பட்டியில் நிறுத்த முடியாது என்று கூறினார்.

இதுபற்றி கண்ணன் ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து இன்று காலை பூசாரிப்பட்டி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு பூசாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆர். டி.ஒ. ராஜசேகரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு வந்து சாலை மறியல் ஈடுபட்ட பொது மக்களிடம் சமரசப்படுத்தினர்.அனைத்து பஸ்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News