தமிழ்நாடு

ஆவடியில் மினிபஸ் சேவை 'திடீர்' நிறுத்தம்- மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-08-02 06:28 GMT   |   Update On 2023-08-02 06:28 GMT
  • நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
  • கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருநின்றவூர்:

ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து தினந்தோறும் மொத்தம் 177 பஸ்கள் இயங்கி வருகிறது.இதில் 14 மினி பஸ்கள் ஆகும். ஆவடியில் இருந்து கோயம்பேடு, தாம்பரம், அம்பத்தூர், பாரிமுனை,பல்லாவரம், ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆவடியில் இருந்து பெரும்பாலான பஸ்போக்குவரத்து குறைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இதற்கிடையே ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து திருவேற்காட்டிற்கு இயக்கப்பட்ட மினிபஸ்(எஸ்52) திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அந்த பஸ்சை நம்பி வரும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த மினபஸ் சேவை கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.ஆவடி சந்தை, வசந்தம் நகர், கோவர்தனகிரி, ஐயங்குளம், பருத்திப்பட்டு, சுந்தரசோழபுரம் வழியாக திருவேற்காடு வரை சென்று வந்தது. திருவேற்காடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் இந்த மினி பஸ்சை அதிகம் பயன்படுத்தினர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளதால் பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.

தற்போது ஆடி மாதம் என்பதால், திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நிறுத்தப்பட்ட மின்பஸ் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆவடியில் இருந்து அண்ணா சதுக்கம் வரை செல்லக்கூடிய 40ஏ, 24 சி ஆகிய பஸ்களும் தற்போது இயங்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆவடி பஸ்நிலையத்தில் இருந்து திருவேற்காடு, கோவில் பதாகை, சேக்காடு அண்ணாநகர், காமராஜர் உள்ளிட்ட இடங்களுக்கு இயங்கி வந்த மினிபஸ் சேவைகளும் குறைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News