கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (உள்படம்: உயிரிழந்த செம்புலிங்கம்)
போலீசார் தாக்கியதால் விவசாயி பலி?- கொலை வழக்கு பதிவு செய்ய அன்புமணி ராமதாஸ் அறிக்கை
- விக்கிரமங்கலம் போலீசார் வல்லவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார்.
அரியலூர்.
தஞ்சை மாவட்டம் அணைக்குடி கிராமம் காலனி தெருவை சார்ந்த புருஷோத்தமன். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சரகம், காசாங்கோட்டை கிராமத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக சீர்வரிசை எடுத்து சென்றார்.
அப்போது ஒரு தரப்பினர் இந்த வழியாக செல்லக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வல்லவன் உட்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்ய சென்ற போலீசார் விவசாயி செம்புலிங்கம் என்பவரை விசாரித்துள்ளனர். அப்போது அவரையும், குடும்பத்தாரையும் போலீசார் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. பின்னர் செம்புலிங்கம் உள்பட 3 பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் செம்புலிங்கம் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
செம்புலிங்கம் இறப்புக்கு போலீசாரே காரணம் எனவும், தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் காவல் துறையினர் வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி விவசாயி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அவரது மனைவியும், மகனும் காயமடைந்துள்ளனர். விவசாயி உயிரிழப்புக்கு காவலர்கள் நடத்திய தாக்குதல் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் கூட, அதற்கு காரணமானவர்களை காவல் துறை இதுவரை கைது செய்யாதது கண்டித்தக்கது.
செம்புலிங்கத்தின் மருமகன் அருண்குமார் மீது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அது குறித்து அருண்குமாரை விசாரிப்பதற்காக குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பழனிவேல் என்பவர் தலைமையில் 8 காவலர்கள் கடந்த நவம்பர் 25-ந்தேதி செம்புலிங்கம் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் அருண்குமார் இல்லை என்று தெரிகிறது.
அதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தலைமையிலான காவலர்கள் வீட்டில் இருந்த செம்புலிங்கம், அவரது மனைவி சுதா, மகன் மணிகண்டன் ஆகிய மூவரையும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர். அதனால் காயமடைந்த மூவரும் அரியலூர் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வீடு திரும்பினார்கள். அப்போதிலிருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் நேற்று உயிரிழந்து விட்டார்.
போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த போது, காவல் துறையினருக்கு அளித்த வாக்குமூலத்தில் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்தும், தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் செம்புலிங்கம் தெளிவாக விளக்கியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களிலும் காவல் துறையினர் தாக்கியது தான் அவரது காயங்களுக்கு காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
செம்புலிங்கத்தின் மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். 8 காவலர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். உயிரிழந்த செம்புலிங்கம் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதிக் கேற்ற அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.