தமிழ்நாடு

சுதந்திரதின விழா பாதுகாப்பு பழனி மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ்

Published On 2023-08-14 05:43 GMT   |   Update On 2023-08-14 05:43 GMT
  • தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
  • மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

பழனி:

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளை போலீசார் மெட்டல் டிடக்டர் கொண்டு சோதனை நடத்தி வருகின்றனர். தண்டவாள பகுதிகளில் மோப்பநாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரெயில் நிலையங்களுக்கு வரும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான பரிசோதனைக்கு பிறகே அனுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல் ரெயில் பெட்டிகளிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். தற்போது தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகின்றனரா? என ஆய்வு நடத்தி வருகின்றனர். மலைக்கோவிலில் உள்ள தங்க கோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மசூதி, தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சீருடை அணியாத போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். லாட்ஜூகள், தங்கும் விடுதிகளில் எவ்வித காரணமும் இன்றி வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News