தமிழ்நாடு செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு

Published On 2023-06-26 11:08 IST   |   Update On 2023-06-26 11:08:00 IST
  • வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.
  • வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது48). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் கொப்புசித்தம்பட்டியில் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார்.

விஜயலட்சுமி பந்தல்குடியில் வசித்து வருவதால் கொப்புசித்தம்பட்டியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் உறவினர் பஞ்சவர்ணம் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று பஞ்சவர்ணம் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் 3 காலி மது பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து வீட்டின் மீது சரமாரியாக வீசிவிட்டு தப்பினார். இதில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீட்டின் கதவு முன்பு மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. கதவு, ஜன்னல் போன்றவை எரிந்து சேதமாயின.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஜெய்சங்கர், அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி அங்கு சிதறிக்கிடந்த வெடி குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வன் என தெரியவந்தது.

கடந்த ஊராட்சி மன்ற தேர்தலின்போது இவரது மனைவி தோல்வியடைந்தார். இது தொடர்பாக விஜயலட்சுமி தரப்புக்கும், தாமரைசெல்வன் தரப்புக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜய லட்சுமிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தாமரை செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News