தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளை மூட கோரி 4-வது நாளாக மக்கள் போராட்டம்
- கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர்.
- போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
இந்த குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி பல இடங்களில் மனு அளித்தனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஊரை காலி செய்து ஊரின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊரே வெறிச்சோடியது.
ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
கல்குவாரிகளை உடனே மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.