தமிழ்நாடு

இது பார் அல்ல.... பஸ் நிலையக்கட்டிடம்தான்...




கோயம்பேட்டில் பெரும் குடிமகன்களால் பெரிய பஸ்நிலையத்தின் அவல நிலை- பயணிகள் வேதனை

Published On 2022-06-12 10:27 GMT   |   Update On 2022-06-12 10:27 GMT
  • குடித்துவிட்டு காலி பாட்டில்களையும் அங்கேயே வைத்துவிட்டு செல்வதால் அந்தப் பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது.
  • பஸ் நிலையத்துக்குள் போலீஸ் நிலையமும் இருக்கிறது. இருந்தும் இந்த அவல நிலை.

சென்னை:

போதை தலைக்கேறினால் குடிமகன்களுக்கு சுற்றி இருப்பதும் தெரிவதில்லை. அவர்கள் செய்வதும் புரிவதில்லை.

உச்சகட்ட போதையில் அரை நிர்வாணமாக தெருக்களில் குப்பைகளில் பலர் விழுந்து கிடப்பதை பார்க்கலாம்.

ஆனால் பொது இடங்களில் பொதுமக்கள் பஸ்முகம் சுளிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்வது தான் பலரையும ஆதங்கப்பட வைத்துள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையம், 24 மணி நேரமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்லும் இடம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் ஏராளமான பஸ்கள் இங்கிருந்துதான் புறப்படுகின்றன.

தலைநகர் சென்னைக்கு வருபவர்கள் பரந்து விரிந்து காட்சியளிக்கும் பஸ்நிலையத்தின் அழகையே பிரமிப்புடன் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு பிரமாண்டமான பஸ்நிலையம் குடிமகன்களின் அலம்பலால் அலங்கோலமாகி வருகிறது.

பஸ்நிலையத்துக்கு வெளியில் இருந்து மது பானங்களை வாங்கி வருகிறார்கள். ஆட்கள் நடமாட்டத்தை பற்றியோ, பொது இடம் என்பதை பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் ஆற அமர அமர்ந்து பாட்டில்களை திறந்து டம்ளரில் ஊற்றி தண்ணீர் கலந்து நண்பர்களுடன் 'சியர்ஸ்' போட்டு குடிக்கிறார்கள்.

அவர்களை பார்த்து 'சீ.....' என்று பெண்கள் முகம் சுளித்தபடி செல்வதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதில்லை.

முக்கியமாக கோயம்பேடு போலீஸ் நிலையம் நுழைவு வாயில் வழியாக உள்ளே பஸ் செல்லும் வழியில் கட்டிடத்தின் ஓரத்தில் பகலிலேயே பொதுமக்கள் ஏராளமானோர் செல்லும்போது கூட எதையும் கண்டுகொள்ளாமல் மது அருந்தி வருகின்றனர் இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுளித்தபடி செல்லும் அவல நிலையை காணமுடிகிறது. குடித்துவிட்டு காலி பாட்டில்களையும் அங்கேயே வைத்துவிட்டு செல்வதால் அந்தப் பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது.

பல இடங்களில் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் சிதறிகிடக்கின்றன.

குடிமகனே.. நீ குடிமகனே என்று யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இந்த நிலை. பஸ் நிலையத்துக்குள் போலீஸ் நிலையமும் இருக்கிறது. இருந்தும் இந்த அவல நிலை.

Tags:    

Similar News