தமிழ்நாடு செய்திகள்

சாத்தூர் அருகே ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Published On 2023-04-02 10:38 IST   |   Update On 2023-04-02 10:38:00 IST
  • பஸ் இருந்த பயணிகளின் உடமைகளும் தீயில் எரிந்து நாசமாகின.
  • ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சாத்தூர்:

குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கோவைக்கு நேற்று இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ராமநாதபுரத்தை சேர்ந்த அகிலன் (வயது 44) என்பவர் ஓட்டி சென்றார். களியக்காவிளையை சேர்ந்த விவன் (35) என்பவர் கிளீனராக இருந்தார்.

ஆம்னி பஸ்சில் மொத்தம் 14 பயணிகள் இருந்துள்ளனர். அந்த பஸ் நள்ளிரவு 12.30 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வந்தது. சாத்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே வந்த போது பஸ்சில் இருந்து பலத்த சத்தம் கேட்டது.

இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தி கீழே இறங்கி பார்த்தார். அப்போது பஸ்சின் டீசல் டேங்க் அருகே குபுகுபு என புகை வந்தது. இதையடுத்து டிரைவரும், கிளீனரும் சேர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறக்கினர்.

பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும் பஸ் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது. இதுகுறித்து சாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் பஸ் முழுவதுமாக தீ பிடித்து எரிந்தது. பஸ் இருந்த பயணிகளின் உடமைகளும் தீயில் எரிந்து நாசமாகின. ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பஸ்சில் தீப்பிடித்து எரிய தொடங்கியபோதே டிரைவர் பார்த்து பயணிகளை உடனடியாக வெளியேற செய்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் மதுரை நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றியமைத்து மற்ற வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

நான்கு வழிச்சாலையில் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் சாத்தூரில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News