தமிழ்நாடு

அமைச்சர் நாசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

Published On 2023-01-25 23:04 GMT   |   Update On 2023-01-25 23:04 GMT
  • தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.
  • குற்றங்களை ஆராய்ந்து எந்தவித பாகுபாடும் இன்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில், தி.மு.க. சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பேச இருந்த நிலையில், அந்தப் பணிகளை பார்வையிட சென்ற பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர், அங்கு நாற்காலிகள் போடாததால் ஆத்திரம் அடைந்து, தான் அமைச்சர் என்பதையும் மறந்து, கல் வீச்சில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஓர் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என்றே மக்கள் கருதுகிறார்கள்.

அமைச்சர்கள் இதுபோன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டபோது, முதலமைச்சர் வேண்டுகோள் விடுப்பதை தவிர்த்து கடும் நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல் நடைபெற்றிருக்காது.

குற்றங்களை ஆராய்ந்து எந்தவித பாகுபாடும் இன்றி நடுநிலையுடன் செயல்படுவதே நல்ல ஆட்சி முறை என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News