வெள்ளத்தில் மிதக்கும் சீர்காழி- தெருவில் 2 அடி உயரத்துக்கு ஓடும் தண்ணீரால் இயல்பு வாழ்க்கை முடங்கியது
- சீர்காழி தெட்சிணாமூர்த்தி நகர், கோவிந்தராஜ் நகர், இரணியன் நகரில் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, கொள்ளிடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.
சீர்காழி நகரில் மட்டும் ஒரே நாளில் 44 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி உள்ளது. இதேப்போல் கொள்ளிடத்தில் 31 செ.மீ, செம்பனார்கோவிலில் 24 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
இன்றும் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், சட்டநாதபுரம், திருமுல்லைவாசல், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக சீர்காழி தெட்சிணாமூர்த்தி நகர், கோவிந்தராஜ் நகர், இரணியன் நகரில் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அதிலும் சிலர் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் நீந்தியப்படி பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இது தவிர சாலை எங்கும் உள்ளது என தெரியாத அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறியபடி சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தேனூர் கதவணையில் இருந்து பிரதான வாய்க்காலான முடவன் வாய்க்காலில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்தும் கரை வழிந்து தண்ணீர் அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இது தவிர விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேப்போல் சூரைக்காடு உப்பனாற்றில் கரை உடைந்து தண்ணீர் வெளியேறி 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
தொடர்ந்து 2 நாட்களாக இடைவிடாது பெய்து வரும் கனமழையால் சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் கிடக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், திருவெண்காடு, திருமுல்லைவாசல், பொறையாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்இணைப்பு இன்று காலை 11 மணி வரை சீராகவில்லை. இதனால் விடிய விடிய கனமழையாலும், மின்தடையாலும் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.