தமிழ்நாடு செய்திகள்

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் கையெழுத்திட வேண்டும்: அமைச்சர் பொன்முடி

Published On 2023-10-25 12:09 IST   |   Update On 2023-10-25 12:09:00 IST
  • தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது கவர்னருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை.
  • நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாணவ-மாணவிகள் தெளிவுடன் உள்ளனர்.

சென்னை:

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் தமிழக கவர்னர் கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் தனது கல்லூரி படிப்பையே இழந்தவர் அவர். சிறையிலும் இருந்துள்ளார்.

எனவே சங்கரய்யா பற்றிய வரலாற்றை தெரிந்து கொண்டாவது கவர்னர் நிச்சயமாக கையெழுத்திடுவார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் மீது கவர்னருக்கு உண்மையிலேயே அக்கறை இல்லை. அப்படி அக்கறை இருந்தால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் அவர் கையெழுத்திட வேண்டும்.

நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் மாணவ-மாணவிகள் தெளிவுடன் உள்ளனர். விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர்களிடம் நான் பேசினேன். அவர்கள் எல்லோரும் எங்களுக்கு நீட் தேர்வே வேண்டாம் என்று குரல் எழுப்பி கையெழுத்திட்டனர்.

ஆன்லைன் மூலமாகவும் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்தை போட்டு அனுப்பலாம். விளையாட்டுத்துறை அமைச்சரும் இதை அறிவித்துள்ளார்.

50 லட்சம் கையெழுத்தையாவது வாங்கும் வகையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் அனைவரும் கையெழுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீட் தேர்வால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதை உணர்ந்து அதற்கு மேலாக மாணவர்கள் கையெழுத்திடுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News