தமிழ்நாடு செய்திகள்

சேலம் சர்க்கார்கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

Published On 2022-06-22 12:03 IST   |   Update On 2022-06-22 12:03:00 IST
  • மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
  • சோனா இயற்கை மற்றும் யோகா கல்லூரி நடைபெறும் யோகா தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.

சேலம்:

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சேலம் வந்தார். அவர் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து சேலம் அருகே உள்ள சர்க்கார்கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தடுப்பூசி செலுத்தியது தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் புற நோயாளிகள் எண்ணிக்கை பிரசவத்திற்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து மருந்துகள் இருப்பு குறித்தும் ஆவணங்களை பார்வையிட்டார்.

ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடமும், சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும் மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்திட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.

இன்று காலை சோனா இயற்கை மற்றும் யோகா கல்லூரி நடைபெறும் யோகா தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் வழங்குகிறார்.

ஆத்தூர் அருகே மல்லியகரையில் நடைபெறும் விழாவில் இளம்பிள்ளை, மல்லூர், மல்லியகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 44 லட்சம் செலவில் புதிய கட்டிடம், வனவாசி புள்ளிபாளையம் மற்றும் குட்டப்பட்டியில் ரூ.75லட்சம் மதிப்பில் செவிலியர்கள் குடியிருப்புகள், கூனாண்டியூர் மற்றும் மோரூரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஆரோக்கிய நல மையக் கட்டிடம், சங்ககிரியில் ரூ.25 லட்சத்தில் கலப்பு உயர் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.

Tags:    

Similar News