தமிழ்நாடு

வீட்டு வசதி வாரியத்தில் முறைகேடு- அமைச்சர் பெரியசாமி வழக்கில் இருந்து விடுவிப்பு

Published On 2023-03-18 09:30 GMT   |   Update On 2023-03-18 10:01 GMT
  • தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
  • வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை.

சென்னை:

கடந்த 2008-ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது.

புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. சந்தை விலைக்குதான் விற்கப்பட்டது.

இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை. புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து, உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News