தமிழ்நாடு

ஆய்வு செய்யாமலேயே பொருள் தரமில்லை என கூறுவது வருத்தமளிக்கிறது- அமைச்சர் சக்கரபாணி பதிலடி

Published On 2022-10-16 13:47 GMT   |   Update On 2022-10-16 13:47 GMT
  • மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.
  • டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல், "பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும், தரமற்ற அரிசியை தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்குகிறது.

திமுகவினர் பிரதமர் மோடி குறித்து தரம் குறைந்த வார்த்தைகளில் விமர்சிக்கின்றனர். மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும் இங்குள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது" என்று கூறினார்.

இந்நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும். 12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது.

பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகரில் நியாயவிலை கடைகளை ஆய்வு செய்த மத்திய மந்திரி அஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்.

நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News