தமிழ்நாடு

மரக்காணம் கள்ளச்சாராய மரண வழக்கு- சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

Published On 2023-05-19 04:00 GMT   |   Update On 2023-05-19 04:00 GMT
  • விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
  • சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர்.

விழுப்புரம்:

மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து 14 பலியான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்த 14 பேர் பலியானார்கள்.55-க்கும் மேற்பட்டோர் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவ மனை, மரக்காணம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விஷச்சாராயம் குடித்து 14 பேரி பலியானதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிக்கு டி.எஸ்.பி. பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், சீனிவாசன், மது விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மரிய சோபி மஞ்சுளா, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், மரக்காணம் போலீஸ் ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி, விஷச்சாராய விற்பனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம், உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகள் புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மரக்காணம் போலீசார் கொலை வழக்காக மாற்றினார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி.கூடுதல் டி.எஸ்.பி. கோமதி நியமிக்கப்படார்.

இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் இருந்து வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.எஸ்.பி. கோமதியிடம் வழங்கப்பட்டது.

இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கினார்கள். அவர்கள் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் மெத்தனால் வழங்கிய ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் விழுப்புரத்தில் முகாமிட்டு இந்த வழக்குதொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். சாராய விற்பனையில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறையினரையும் விசாரிக்க உள்ளனர். இதனால் போலீசார் கலக்கத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News