தமிழ்நாடு செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: கணவர்-மாமனார் தலைமறைவு

Published On 2023-08-12 09:48 IST   |   Update On 2023-08-12 09:48:00 IST
  • மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.
  • வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ் (வயது 27) கூலித் தொழிலாளி. இவருக்கும் காசிநாதன் மகள் ஷாலினி (வயது23 )என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்துக்குப் பின் சிறிது காலம் கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன.

நேற்று நள்ளிரவு பிரகாஷ் மனைவி ஷாலினியுடன் சண்டை போட்டார்.

பின்னர் கணவர் மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் தூங்க சென்றதாக தெரிகிறது.

ஆனால் மிகுந்த மனவேதனையில் இருந்த ஷாலினி இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பிரகாஷ், மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் போலீசுக்கு பயந்து வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாக விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஷாலினி உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கணவர், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோர் ரேவதியிடம் சண்டை போடும் சத்தம் கேட்கும். நேற்று நள்ளிரவும் பயங்கர சத்தம் கேட்டது. வழக்கமான சண்டைதானே என்று நாங்களும் இருந்து விட்டோம். ஆனால் இப்படி ஒரு முடிவை ஷாலினி எடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றனர்.

இதற்கிடையே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் ஷாலினி இறந்து விட்டதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

திருமணமாகி 4 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், உடையார்பாளையம் உதவி கலெக்டர் பரிமளம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News