தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை- சட்டசபையில் இன்று தாக்கல்

Published On 2022-10-18 03:48 GMT   |   Update On 2022-10-18 03:48 GMT
  • சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
  • அறிக்கைகள் மீது காரசார விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் உள்கட்சி பிரச்சனை காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டதில் பங்கேற்கவில்லை.

ஆனால், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். சட்டப்பேரவையின் முதல் நாள் நடவடிக்கையில் மறைந்த உறுப்பினர்கள், தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு இரண்டு மணி துளிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. அப்போது சட்டசபை கூட்டத்தை 2 நாட்கள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்றும், நாளையும் சட்டசபை கூட்டம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். மீண்டும் சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கைகள் மீது காரசார விவாதங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர, தமிழகத்தில் இந்தி திணிப்பு குறித்த அறிக்கையும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். துணை நிதி நிலை அறிக்கையும் தாக்கலாகிறது. 2 நாட்களும் கேள்வி பதிலும் இடம் பெறும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News