கூடலூர் பகுதியில் தொடர் மழை: பாக்கு, வாழை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது
- கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
- பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால், அப்பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதவிர மின் கம்பங்களின் மீது விழுவதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.
பலத்த மழையால் நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர் பலத்த மழையால் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட குற்றிமுற்றி பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. வாழை, பாக்கு மற்றும் பயிர்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பாடந்தொரை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் கம்மாத்தி, பாடந்தொரை, முதுமலை ஊராட்சி பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
பந்தலூர் தாலுகாவில் பெய்த மழைக்கு பொன்னானி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
பந்தலூர் அருகே இரும்புபாலம் பகுதியில் வீரம்மாள் என்பவரது வீட்டின் சுவர், மேற்கூரை இடிந்து விழுந்தது. இதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியே தப்பி ஓடியதால் காயம் இன்றி உயிர் தப்பினர்.
தொடர்ந்து மழை பெய்வதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். பொன்னாளி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பொன்னானியில் இருந்து பந்தப்பிளா, அம்மன்காவு செல்லும் சாலையில் உள்ள பாலத்தை தொட்டவாறு வெள்ளம் சென்றது.
தொடர் மழையால் தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மச்சிக்கொல்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து மண் சரிவுகளை அகற்றும் பணியில் அப்பகுதியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.