தமிழ்நாடு

ராம்குமார் தற்கொலை வழக்கு- உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவு

Published On 2022-10-31 10:52 GMT   |   Update On 2022-10-31 10:52 GMT
  • ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.
  • சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார் என்பவரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.

ஆனால் ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார்.

சுவாதி கொலை வழக்கில் எனது மகனுக்கு தொடர்பு இல்லை. எனது மகனை வேண்டுமென்றே கொலை வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். எனவே ராம்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்.

மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டில் ராம்குமாரை போலீசார் கைது செய்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் கூறினர். போலீசார்தான் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றனர்.

ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அது முற்றிலும் தவறு. ஜெயிலில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை. எனவே இந்த வழக்கில் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும். சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தற்கொலையா? இல்லையா? என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Tags:    

Similar News