தமிழ்நாடு செய்திகள்

ஒரே ஊசியை பயன்படுத்துவதால் எய்ட்ஸ் ஆபத்து- டாட்டூ தொழிலாளர்களிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை

Published On 2023-03-01 15:00 IST   |   Update On 2023-03-01 15:00:00 IST
  • ஆன்மீக நகரான பழனி மிகச்சிறந்த சுற்றுலா நகரமாகவும் உள்ளது.
  • குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்து டாட்டூ வரைந்து செல்கின்றனர்.

பழனி:

ஆன்மீக நகரான பழனி மிகச்சிறந்த சுற்றுலா நகரமாகவும் உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர். திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. இவ்வாறு வரும் பக்தர்கள் பழனி கடை வீதிகளில் விற்கப்படும் சில முக்கிய பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

சாமி படங்கள், சிலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை இங்கு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சிவகிரிப்பட்டி பைபாஸ் பகுதியில் டெண்ட் அமைத்து ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் இந்த சிலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் பழனி வரும் பக்தர்களுக்கு எந்திரங்கள் மூலம் டாட்டூ என்னும் நவநாகரீக பச்சை குத்தும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு எழுத்துக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுவாமி படம், உருவங்கள் மற்றும் பல்வேறு வடிவங்கள் வரைவதற்கு அவற்றின் தன்மைக்கு ஏற்க ரூ.300 முதல் வசூல் செய்யப்படுகிறது.

குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்து டாட்டூ வரைந்து செல்கின்றனர். இவ்வாறு டாட்டூ வரைய பயன்படுத்தப்படும் எந்திரத்தில் பொருத்தப்படும் ஊசிகள் மாற்றப்படுவதில்லை என்று நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனால் எய்ட்ஸ் மற்றும் ரத்த பரிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாவட்ட கலெக்டர், பழனி சப்-கலெக்டர் ஆகியோருக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து நகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் மனோஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அடிவாரப்பகுதியில் டாட்டூ வரையும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஒருவருக்கு பயன்படுத்தும் ஊசியை மற்றொருவருக்கு பயன்படுத்த கூடாது. ஊசியை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் பதப்படுத்தி வாரம் ஒருமுறை நகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரே ஊசியை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் மற்றும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரத்த பரிமாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டதுடன் இது குறித்து நடைபெற உள்ள விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Similar News