தமிழ்நாடு செய்திகள்

குடியாத்தம் அருகே ஜெயிலில் இருந்து வெளியே வந்த வாலிபர் குத்தி கொலை

Published On 2023-09-12 10:45 IST   |   Update On 2023-09-12 10:45:00 IST
  • கஞ்சா விற்பனை செய்வதில் இம்ரானுக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
  • வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கல்லூர் கிராமம், நேரு நகரை சேர்ந்தவர் இம்ரான் (வயது 29). இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் குடியாத்தம் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்த இம்ரான் கடந்த ஏப்ரல் மாதம் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்தார். தற்போது தனது வீட்டில் தங்கி கிடைத்த வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே இம்ரான் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர்.

வயிற்றுப் பகுதியில் பலமாக காயம் பட்டதில் இம்ரான் குடல் சரிந்து கீழே விழுந்தார். வலி தாங்க முடியாமல் இம்ரான் கூச்சலிட்டு கதறினார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, இம்ரானை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த இம்ரான் நேற்று இரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கஞ்சா விற்பனை செய்வதில் இம்ரானுக்கும், கஞ்சா வியாபாரிகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இவரது எதிரிகள் யார்? இவர் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். போலீஸ் உளவாளியாக இம்ரான் செயல்பட்டதாக கருதி அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அவரது செல்போன் அழைப்புகளின் விவரங்களை சேகரித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News