தமிழ்நாடு

கரூப்பூர் பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்ட காட்சி.

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா? வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை

Published On 2024-04-09 07:10 GMT   |   Update On 2024-04-09 07:10 GMT
  • சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.
  • வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குத்தாலம்:

மயிலாடுதுறை நகரில் கடந்த 2-ம் தேதி சிறுத்தை ஒன்று உள்ளே புகுந்தது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது. சிறுத்தை உலவிய பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டதில் கடந்த 3ம்தேதி சிறுத்தையின் புகைப்படம் பதிவாகி வெளியிடப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் பகுதிக்கு இடம்பெயர்ந்தது.

இந்நிலையில் கடந்த 6 தினங்களாக மயிலாடுதுறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் அடர்ந்த காடுகள் போல் உள்ள இடங்களில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க மயிலாடுதுறை சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு, பழையகாவேரி ஆறுகளின் கரையோர பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க 7 கூண்டுகள் வைக்கப்பட்டது. எந்த தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காவிரி பாலத்தின் கீழ்ப்புறத்தில் சிறுத்தையின் எச்சம் காணப்பட்டது. அதனை சேகரித்து உறுதிபடுத்த வண்டலூர் உயர் தொழில்நுட்ப வன உயிரின மையத்திற்கு வனத்துறையினர் அனுப்பி உள்ளனர்.

இதனிடையே மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குத்தாலம் தாலுகா காஞ்சிவாய் என்ற ஊரில் சிறுத்தை உலவுவதாக தகவல் கிடைத்தது. சிறுத்தையின் கால்தடம் உள்ளதாக வனத்துறையினர் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பாலையூர் பகுதிக்குட்பட்ட காஞ்சிவாய் இடக்கியம் கரூப்பூர் ஆகிய ஊர்களில் நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறு ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டதால் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாகவும், மயிலாடுதுறை நகர்புற பகுதிகளில் வைக்கப்பட்ட மொத்த கூண்டுகளும் காஞ்சிவாய் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு 16 கூண்டுகள் நீர்வழிப்பாதைகளில் வைக்கப்பட்டுள்ளதாக, 15 குழுக்கள் அமைக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் நாகை மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் தோமர் தெரித்தார்.

இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எல்லை பகுதிகள் அமைந்துள்ளதால் சிறுத்தை அங்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதா என்று கோணங்களில் வனத்துறையினர் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா நரசிங்கம்பேட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு சிறுத்தை இடம் பெயர்ந்ததா என்ற தகவல் பரவி வருவதால் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய வதந்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News