தமிழ்நாடு (Tamil Nadu)

வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க வயல்களுக்கு சேலைகளால் வேலி அமைத்த விவசாயிகள்

Published On 2024-01-02 06:25 GMT   |   Update On 2024-01-02 06:25 GMT
  • விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர்.
  • விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காபி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. மேலும் காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, ஏலக்காய், அவக்கோடா, ஆரஞ்சு, எலுமிச்சை, சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்டவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டெருமை அட்டகாசம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதேபோல் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள், தோட்டத்தின் முன்வேலிகளை எளிதில் உடைத்து விட்டு உள்ளே புகுந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்திருந்த போதும் அதனையும் மீறி பயிர்கள் சேதமடைவது தொடர்ந்து வந்தது.

இதையடுத்து விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக சேலைகளால் வேலி அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே வண்ணத்தில் சேலைகளை கட்டாமல் பல்வேறு நிறங்களில் வயல்களுக்கு சேலையால் வேலி அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் இதை பார்க்கும் போது கண்ணை கூசும் வகையில் இருக்கும் என்பதால் விலங்குகள் அதன் அருகே வருவதற்கு தயக்கம் காட்டி வேறு இடத்துக்கு சென்று விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் விளை நிலங்களுக்குள் விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News