தமிழ்நாடு செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு: எண்ணூர் துறைமுகம்-பழவேற்காடு சாலை மணலால் மூடப்பட்டது

Published On 2022-12-13 12:38 IST   |   Update On 2022-12-13 12:41:00 IST
  • பழவேற்காடு பகுதியிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
  • சாலையை சீரமைக்க கோரி மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

பொன்னேரி:

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9-ந்தேதி இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டித்தீர்த்தது.

பழவேற்காடு பகுதியிலும் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. பலஅடி உயரத்துக்கு அலைகள் எழும்பி கடல் நீர் கரையை கடந்து உள்ளது. அப்போது எண்ணூர் துறைமுகம்- பழவேற்காடு இடையே கருங்காலி என்ற இடத்தில் சாலை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டது.

பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை கடல் மண்ணால் முழுவதுமாக நிரம்பி மூடப்பட்டது. இதனால் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி, எண்ணூர், துறைமுக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காட்டுப்பள்ளியில் இருந்து பழவேற்காடு, பொன்னேரி, ஆந்திர மாநிலத்திற்கு செல்லக் கூடிய பயணிகளும் பணிக்கு செல்வோரும் அவ்வழியாக செல்ல முடியாமல் பழவேற்காட்டில் இருந்து காட்டூர், மீஞ்சூர், வடசென்னை அனல்மின் நிலையம் வழியாக சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிற்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சாலையை சீரமைக்க கோரி மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், மற்றும் அதிகாரிகள் கருங்காலி பகுதியில் முகாமிட்டு 2 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலையில் மூடிய மணலை தூர்வாரி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கடல் சீற்றத்தின் போது ஆண்டு தோறும் இந்த இடத்தில் கடல் நீர் சாலை மீது செல்வதும் அதன் பின்னர் மணல் தூர்ந்து அடைபடுவதுமாக இருந்து வருகிறது. எனவே இந்த இடத்தில் மேம்பாலம் ஒன்று அமைத்துக் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு. 200 மீட்டர் மட்டுமே கடலுக்கும் ஆற்றுக்கும் இடைப்பட்ட தூரமாக இருந்த நிலையில். தற்போது 10 மீட்டர் அளவு கடலுக்கும் சாலைக்கும் இடையேயான தூரம் சுருங்கி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் ஆபத்தில் இருந்து தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எண்ணூர் துறைமுகம்-பழவேற்காடு சாலையில் மூடிய மணலை அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. அப்போது மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு அமைப்பாளர் முகம்மது அலவி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வழகி எர்ணாவூரன், எம்.கே.தமின்சா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானவேல், சேதுராமன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News