சேலத்தில் எண்ணெய் கடையில் 1 கோடி ரூபாய் மோசடி செய்த ஊழியர் கைது
- கருணாகரன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் அங்கு சென்று கருணாகரனை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் தெருவில் வசித்து வருபவர் ரகுமான் (வயது 50). இவர் செவ்வாய்ப்பேட்டை பழைய மார்க்கெட் பகுதியில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் 16 ஆண்டுகளாக கருணாகரன் (45) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரகுமான் வரவு-செலவு கணக்குகளை சரிபார்த்த போது கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை கடையிலிருந்து 1 கோடி ரூபாய்க்கும் மேல் கருணாகரன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து கேட்டபோது கருணாகரன் ரகுமானை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரகுமான் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கருணாகரன் மோசடி செய்த பணத்தை தனது மனைவி பவித்ராவின் வங்கி கணக்கில் செலுத்தியது தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் கருணாகரன் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று கருணாகரனை கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.